பத்மாவதி கந்தப்பு
கரவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 15.12.1963
வீரச்சாவு: 22.11.1990
நிகழ்வு: முல்லைத்தீவு மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
விடுதலைக் கானம் இசைத்த குயில்
ஏதோ பேசிக் கொள்கிறார்கள்.'கெரில்லா இயக்கமாம்' - சிங்களப் பொலிசுக்கும் ஆமிக்கும் ஒளித்திருந்து அடிகொடுத்து விட்டு ஓடிவிடுகின்றார்களாம். 'பெடியள் எல்லாம் இரசியமாகச் சேருகின்றார்களாம்.' ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் அடி வயிற்றில் ஒரு மெதுவான இடியின் அதிர்வு...... தமது பிள்ளைகளை எச்சரிக்கின்றார்கள். "வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். வீணான கதைகள் கதைத்து வீதிகளில் நேரத்தைக் கழிக்க கூடாது. ஆயுதத்தில் மயங்கிவிடக் கூடாது; ஆமியோடு நாம் மோதமுடியாது.*
இருப்பினும் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன - "பொலிஸ் ஜீப் வண்டி தாக்கப்பட்டு துப்பாக்கி கைப்பற்றப்பட்டது ..... இராணுவ வண் டி தாக்கப்பட்டது. இராணுவத்தினர் உயிரிழந்தனர். ......'
அப்படியானால், இந்தக் கெரில்லா இயக்கத்தில் பெண்பிள்ளைகள் பங்குபெறக் கூடாதா? இலங்கை இராணுவத்தில் பெண்கள் சேர்க்கப்படவில்லை. அப்படிச் சீருடை அணிந்து மிகக் கம்பீரமாக ஆயுதம் தரித்து நிற்க, சிங்கள அரசும் பெண்களைச் சேர்க்க மாட்டார்களா?
அப்படியானால் இந்தக் கெரில்லா இயக்கங்கள் இரகசியமாக விட்ட பிரசுரங்கள், புத்தகங்களில் வெளிநாட்டுக் கெரில்லா இயக்கங்களில் பெண்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றதே இவர்கள் நம்மைச் சேர்க்கவில்லையாம்.
இது 1982, 1983 களில் கெரில்லா இயக்கத்தின் செயற்பாடுகளைக் கேள்வியுறுகிற பெண் பிள்ளைகளின் ஏக்கம். இந்த ஏக்கம் டோறாவையும் விடவில்லை. எப்படியும் பாடசாலைக்கு பிரசுரம் தரவருபவரிடம் கேட்டு விடவேண்டும்
பதில் கிடைத்து விட்டது. 'ஆம்...... ஆனால் உடனே எடுக்க மாட்டோம்...... முதலில் எமக்கு உதவிகள் செய்ய வேண்டும். அதன் பின்புதான் எடுப்போம். இன்னும் ஒரு பொம்பிளைப் பிள்ளையையும் எடுக்கவில்லை, எடுக்கும் போது உங்களையும் எடுப்போம்.'
பலநாள் இரகசியச் சந்திப்பில் என்ன உதவிகள் செய்வது? எப்படிச் செய்வது என்று தெளிவானது. பாடசாலைப் படிப்பும், ரீயூட்டறிப் படிப்பும் அரைகுறையானது. புரட்சி அறிவு புகுந்து கொண்டது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பொய் சொல்லவேண்டி வந்தது. புலிகளின் இரகசியமான பிரச்சார வகுப்பு தையல் வகுப்பு என்று கூறப்பட்டது. ஆயுதம் பற்றிய அறிவைப் பெறும் வகுப்பு, சமையல் கலை பயிலும் வகுப்பென்று கூறப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில்தான், டோறாவும் விடுதலைப் பணியில் இரகசியமாக ஈடுபட்டிருந்தாள். அவள் இரகசியமாக வேலை செய்வது வீட்டிற்குத் தெரிய வந்ததும் அப்பா கட்டுப்பாடுகளை விதித்தார். அம்மா கண்ணீர் வடித்தார். சகோதரிகள் பாசத்தைப் பொழிந்தனர். கல்யாணம் பேசி கால் கட்டுப்போட எண்ணினர், டோறா உதறித் தள்ளினாள். தேசத்துக்காகப் போராடும் உரிமையைப் பெறுவதற்காக, வீட்டிற்குள் போராடினாள்; வெற்றியும் கண்டாள். கடைசியில் வெளிப்படையாகவே தனது பணிகளைச் செய்யத் தொடங்கினாள். அவளின் குடும்பத்தாரும் அவளின் பணியில் பங்கு கொண்டனர். இவள் போன்று அந்நேரத்தில் பங்களித்த பெண்கள் யாவரும், வீரமரணத்தைத் தழுவிவிட்ட லெப்டினன்ட் நித்திலாவோடு சேர்ந்து, பெண்கள் மத்தியில் விடுதலைக் கருத்தை விதைத்தார்கள்.
புலிகளின் பிரச்சார ஏடுகள், பத்திரிகைகளை இரகசியமாகப் பெண்கள் மத்தியில் கைமாற்றிக் கொண்டனர். கிராமத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று, பெண்களோடு இரகசியமான முறையில் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தனர். இவ்வாறு விடுதலையில் பங்காற்றிய பெண்கள் ஒன்று திரண்டு, ஒரு அணியாக நின்று, பெண்கள் மத்தியில் பல வேலைத் திட்டங்களை முன்வைத்தனர். 'சுதந்திரப் பறவைகள்' என்ற சஞ்சிகையை முதலில், 1984 மார்கழியில் வெளியிட்டார்கள். இதனை முதன் முதலாக வெளிக்கொண்டு வருவதிலும், தொடர்ந்து அது வெளியிடப்படுவதிலும் டோறாவின் பங்கும் முக்கியமானது. சங்கீதத்திலும் நடனத்திலும் மிகத்திறமை காட்டி வந்த டோறா, 'சுதந்திரப் பறவை' அணியினரின் அரசியல் வேலைத்திட்டமான பாலர் பாடசாலை ஒன்றை அமைத்து, பாலர்களுக்குக் கல்விபோதிக்கும் பணியில் ஓரிரு ஆண்டுகள் பணியாற்றினாள். சேவை மனப்பான்மையோடும், ஆர்வத்தோடும், துடிப்போடும் இதில் பங்காற்றினாள். எங்கே குழந்தைகளைக் கண்டாலும் அள்ளி அணைத்து முத்தம் கொடுக்கும் இவளின் இயல்பும், அந்தக் குழந்தைகளை ரீச்சர் ரீச்சர் என்று பாசத்தைக் கொட்ட வைத்தது.
இது மட்டுமல்ல, 'சுதந்திரப் பறவை' அணி மேற்கொண்ட அனைத்து அரசியல் வேலைத்திட்டங்களிலும் டோறா தனது பங்கை ஆற்றினாள். பின் தங்கிய கிராமந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து, அங்கே கடமை செய்ய பெண்களை அணிதிரட்டினாள். இந்நிலையங்களை நிர்வகிப்பதற்காகவும் மருத்துவம் சம்பந்தமான அறிவைப் பெண்களுக்குப் புகட்டுவதிலும், மருத்துவத்துறையிலும் டோறா தன் அறிவை வளர்த்துக்கொண்டு பணியில் ஈடுபட்டாள்.
இக்காலங்களில் சிறீலங்கா இராணுவ முகாமிலிருந்து ஏவப்படும் எறிகணைகளினாலும் விமானக் குண்டு வீச்சுக்களினாலும் தாக்கப்படும் பொழுது, அந்தப் பகுதிகளுக்கு விரைந்து, முதலுதவிச் சிகிச்சை செய்வதிலும் ஆர்வம் காட்டினாள். வசதியற்ற- தொழில் வாய்ப்பற்ற பெண்களுக்குச் சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதற்காகப் பனை வேலை, தையல் வேலை, மனையியல் வேலை, உணவு பதனிடுதல், பாதுகாத்தல் போன்றவற்றின பயிற்சி வகுப்புக்களை நடாத்தியதோடு, சிறு கைத்தொழில் நிலையங்களை உருவாக்கவும் பாடுபட்டாள். இதன்மூலம் சமூக ஒடுக்குமுறைக்கெதி பெண்களை உறுதிப்படுத்துவதோடு, அரசுக்கெதிரானவெகுஜனப் போராட்டங்களிலும் பெண்களைப் பெருமளவு அணிதிரட்டக் கூடியதாக இருந்தது.
சுயமாகவே பல வேலைகளைத் திட்டமிட்டு ஆர்வத்தோடு செயற்படுத்தி வந்த டோறா, நெல்லியடி, கரவெட்டி, கரணவாய் போன்ற பிரதேசங்களில் மகளிர் அணிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு 1985, 1986களில் அப்பொறுப்பில் இருந்து கடமையாற்றி வந்தாள்.
தமிழீழத்தில் முதன் முதலாக பெண்களுக்கான இராணுவப் பயிற்சிப் பாசறை ஒன்று அமைக்கப்பட்டபோது, டோறா அங்கே தனது ஆயுதப் பயிற்சியை முடித்துக் கொண்டு,1987 ஆடியில் வெளியே வந்த போது, எமது தேசத்தை இந்தியப் படை ஆக்கிரமித்தது.
இந்தியப் படைக்கெதிரான சாத்வீகப் போரில் பெண்களை அணிதிரட்டி, தனது பழைய பொறுப்பிலேயே கடமையாற்றி வந்த டோறா, இந்திய இராணுவம் எமது மண்ணிலே யுத்தத்தைத் தொடங்கிய பொழுது, முதன் முதலாகக் களத்தில் குதித்தாள். இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்து யாழ். மாவட்டத்தில் நடந்த யுத்தத்திலும், வன்னிப் பிராந்தியத்தில் நடந்த யுத்தத்திலும் தீவிரமாகப் பங்குகொண்டாள்.
எமது பகுதிகளை இராணுவம் சுற்றி வளைத்துத் தேடுதல் நடாத்திக்கொண்டிருந்த வேளையில், காவலரண் ஒன்றில் இவள் தனித்து நிற்கின்றபொழுது, இந்திய இராணுவம் எமது முகாமை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. இவ்வேளையில் சமயோசித புத்தியோடும் மிகத்துணிச்சலோடும் தனித்துநின்று போராடினாள். இராணுவம் காயப்பட்டதோடு, தனது ஆயுதங்களின் பகுதிகளையும் போட்டு விட்டுப் பின்வாங்கியது. துணிச்சலோடும் தீரத்தோடும் சாதனை செய்கிற ஏனைய போராளிகள் பாராட்டுப் பெறுவது போன்று, இவளும் எமது தோழர்களினதும் தலைவரினதும் பாராட்டைப் பெற்றாள்.
இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தை இந்த மண்ணிலிருந்து அடியோடு விரட்ட வேண்டுமென்று துடியாய்த் துடித்த போராளிகளில் இவளும் ஒருத்தி.
எமது ஆன்ம உறுதிக்கு முன்னே ஆட்டங் கண்ட இந்திய இராணுவம், எரிமலைகளோடு மேலும் மேலும் மோதி அழிந்து விடாமல் பின்வாங்கிச் சென்றது.
இலட்சிய வீரர்களின் தியாகத்தினாலும், ஆன்ம உறுதியாலும் இந்திய இராணுவத்தை வெளியேற்றி, பெரியதொரு வளர்ச்சிக் கட்டத்தைக் கண்ட எமது விடுதலை இயக்கம், சிறீலங்கா அரசுடன் யுத்த நிறுத்தத்தையும் பேச்சுவார்த்தைகளையும் தொடர்ந்தது.
இவ்வேளையில் மீண்டும் அரசியலில் பணியாற்றப் பணிக்கப்பட்ட *சுதந்திரப் பறவைகள் டோறா பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினாள். பறவை-15ஐ வெளிக்கொணர்வதில் இவளின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. இவ்வேளையில் தமிழீழ மீட்பு நிதி ' சேகரிப்பில் மக்களை அணிதிரட்டி கருத்தரங்குகள் வைத்து, மீட்பு நிதி பெருமளவு சேர்வதற்குப் பெரும் பங்காற்றினாள். இவ்வேளைகளில் இவள் மக்களை அணுகிய விதமும் வழங்கிய கருத்துக்களும் மிகவும் பாராட்டப்பட்டன.
ஆண், பெண் சக போராளிகளின் அபிமானப் பாடகியாவாள் டோறா. நல்லூர் அரங்கிலே அன்னை பூபதிக்கு மக்கள் அஞ்சலி செலுத்தத் திரண்டிருந்த நாளிலே, மகளிர் அணி அஞ்சலிப் பாடல் நிகழ்ச்சியைச் செய்தது. இதில் டோறாவும் தனது பங்களிப்பைச் செலுத்தியிருந்தாள். மக்களோடு மிக நெருங்கிப்பழகி, அவர்களின் பாசத்தையும் நேசத்தையும் இலகுவாகப் பெற்றுக் கொள்வாள். இது போன்றே, தனது வெளியீட்டுத்துறைக்கு வேண்டிய எழுத்தாளர்கள், ஓவியர்களை அணுகி அவர்களின் அன்பையும் நேசத்தையும் மட்டுமல்ல ஆக்கபூர்வமான பங்களிப்பையும் பெற்றுக்கொண்டாள்.
எமது சமாதான முயற்சிகளை முறித்துக் கொண்டு மீண்டும் சிறீலங்கா அரசு, 10.06.1990 இல் தனது யுத்த தாண்டவத்தைத் தொடங்கியது. தமிழீழம் முழுவதும் இரத்தக்களமானது. எமது மக்கள் மீது வெறிகொண்டு தாக்கிய சிங்கள இராணுவத்துக்கும், முஸ்லிம் ஊர்காவல் படைக்கும், இனத்துரோகிகளுக்கும் சமாதி கட்ட எமது தோழர்கள் பலர் உயிரைப் புதைத்தனர்; மண்ணுக்கு உரமாக்கினர்.
எமது சுதந்திர வரலாறு மையினால் எழுதப்படுவது அல்ல - இரத்தத்தினால் எழுதப்படுவது. உணர்வென்ற சக்தியால் தனது உடலைக் கிழித்து, உயிரென்ற பேனாமுனையால் உதிரத்தைத் தொட்டு, போராட்ட வரலாற்றின் ஒரு அத்தியாயத்தை எழுதத்துடித்தாள் டோறா .......
பலாலி இராணுவ முகாமைக் கட்டுப்படுத்தும் காவலரண் பகுதிக்குச் சென்றாள் - குழுத் தலைவியாகப் பொறுப்பேற்றுக்கொண்டாள். இராணுவத்தினுடைய துப்பாக்கி ரவைகளுக்கும் எறிகணைத் தாக்குதல்களுக்கும் இலக்காகி விடாமல் நின்று, எதிரியைத் தாக்குவதற்காகக் காவலரண்களைப் பலப்படுத்தும் வேலையில், தனது குழுவோடு இரவு பகல் தூக்கமின்றிப் பாடுபட்டாள். இராணுவத்தை முடக்கி வைப்பதில் பெண்கள் அணியில் நின்று தீவிரமாகப் போர் புரிந்தாள். களைப்பிருந்தாலும் இப்போது அவள் மிகவும் சந்தோஷமாகக் காணப்பட்டாள்.
ஒரு நாள் இரவு அவள் இருந்த இடத்திற்குச் சென்றேன். ஓர் திடீர்த் தாக்குதலுக்காக மெதுவான ஆர்ப்பாட்டம் முகாமில் தென்படுகின்றது. கடைசியாக அவளை நான் பார்த்தபொழுது...... தன் சிநேகிதியின் கரத்தைப் பற்றியவாறு "நான் போகிறேன்'' என்று முகமலர்ந்து கூறுகின்றாள். அவளின் கரத்தை இறுகப்பற்றிக் கொண்ட அவளின் சிநேகிதி ... "எவ்வளவு தூரம் சாதிக்க முடியுமோ அவ்வளவு தூரம் சாதி. அப்போது. நீ சாவை அணைத்துக்கொண்டால் கூட நான் கவலைப்படமாட்டேன். இப்போது நீ போகின்றாய்; இன்னொரு நாள் உன் பின்னால் நான் வருவேன்" என்கிறாள் - பிரிவு வரப் போகிறது; ஆனால் வெற்றியொன்று கிடைக்கப் போகின்றது என்பதில் உறுதி உடையவளாக.
பத்திரிகைச் செய்தி கூறுகிறது: 'மாங்குளம் முகாம் தகர்க்கப்படுகின்றது. பெண்போராளிகள் உட்பட பல போராளிகள் வீரமரணம். இன்னும் சில மணி நேரங்களின் பின், மாங்குளம் முகாம் பூரணமாகப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். ஆம், ஆர்வத்தோடு வினவுகின்றோம். பெண் போராளிகள் எப்படிப் போராடினார்கள்? வியத்தகு பங்கு வகித்ததாக எல்லோரும் பாராட்டினார்கள்!
டோறா என்ன செய்தாள், பத்துப் பெண் போராளிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிச் செல்கிறாள். இராணுவத்தின் குறிப்பிட்ட காவலரண்களைத் தாக்கியழிக்கும் பொறுப்பை ஏற்கிறாள். எதிர்பார்த்த நேரத்துக்கு முன்பாக தாக்குதல் இலக்கை 20 நிமிடங்களில் அடைகின்றாள். இராணுவக்காவல் அரணுக்கு மிக அண்மையிலிருந்து தாக்குதலை நடாத்துகின்றனர். வீராவேசத்தோடு தனது குழுவுக்குக்கட்டளை பிறப்பித்துப் போர் புரிந்துகொண்டிருந்த டோறா காலில் துப்பாக்கி ரவையை வாங்கிக் கொண்டாள். இருப்பினும் பின்வாங்கவில்லை. தொடர்ந்து சண்டையிடுகிறாள். மீண்டும் கைக்குண்டின் சிதறல் ஒன்று வயிற்றைப் பதம் பார்க்கின்றது. ஆசைக்கு நகர்ந்து இன்னும் இன்னும் முன்னுக்குச் சென்று எதிரியைத் தாக்கி அழிக்க, முடியவில்லை. துணைக்குழுவை அழைக்கின்றாள். அதுதான் அவளின் கடைசிச் செய்தியாக இருக்க வேண்டும்
இப்பொழுது சத்தம் எதையும் காணவில்லை. ஆம், டோறா இறந்துவிட்டாள். தன் இலட்சியப் பாதையில் முழுவதுமாகத் தன்னைக் கொடுத்துவிட்டாள். அவளின் செல்லப்பிள்ளைகளும் அவள் நேசித்த அவளுடன் ஒன்றாக இருந்த பல பெண் போராளிகளும், அவளோடு சேர்ந்து சென்றுவிட்டார்கள். அவள் மீட்டிய விடுதலை இராகங்களும், எமது மனங்களுக்கு இதம் தரும்- எங்களைச் சிரிக்கவைக்கும் அவளின் குறும்புத் தனங்களும்,எமது நெஞ்சங்களை அழுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவளின் இலட்சியவெறி ஓயாது அதைக்கருத்தாக்கி,எம்மை அவளின் பின்னால் இழுத்துச் செல்கின்றது.
மாலினி *
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்