காமாட்சியம்மாள் தர்மரெட்டியார்
கணேசபுரம், பரப்புக்கடந்தான்,
வட்டக்கண்டல்,
மன்னார்
வீரப்பிறப்பு:-18.01.1969
வீரச்சாவு:-04.07.1988
நிகழ்வு:-மணலாறு03.04.1988 அன்று மணலாறு அளம்பிலில் இந்தியப்படையின் எறிகணைத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்து 04.07.1988 அன்று வீரச்சாவு
வீரவேங்கை ராதை
விக்கினேஸ்வரி கணேசு
கரந்தன், நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:-24.04.1966
வீரச்சாவு:-03.07.1988
நிகழ்வு:-மணலாறுமணலாறு அளம்பிலில் இந்தியப்படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு
88 ஆம் ஆண்டின் நடுப்பகுதி.
வன்னிக்காடுகளில் எமது தலைவர் பிரபாகரனைத் தேடி இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சல்லடை போட்டுக்கொண்டிருந்த காலம்........
காடுகளில் புகுந்து தேடுதல் வேட்டை நடத்தியபோதெல்லாம், பாரிய உயிரிழப்புக்களைச் சந்தித்த ஆக்கிரமிப்புப் படையினர் பின்னர் தமது முகாம்களில் இருந்தவாறு காட்டுப்பகுதிகளை நோக்கித் தொடர்ச்சியான எறிகணை (ஷெல்) தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்........
எங்களுடைய முகாம் அமைந்திருந்த அலம்பில் காட்டுப் பகுதியை நோக்கித் தினமும் இடைவிடாமல் எறிகணைகள் பாய்ந்து கொண்டிருந்தன. எனவே அந்தப் பகுதியை விட்டு அதற்குச் சமீபமான வேறொரு பகுதியில் எமது முகாமை மாற்று வதற்காக, எம்மில் குறிப்பிட்ட சிலர் மட்டும் அந்த இடத்திற்குப் போய்த் தற்காலிகமுகாம் ஒன்று அமைத்து - நிரந்தர முகாம் அமைக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தோம்.
அந்த இடத்திலிருந்து சிறிது தூரத்துக்கு அப்பால் அருவி ஒன்று.... அருவியின் மேற்குப் புறமாய்ப் பெரியவெளி ஒன்று. இப்படிப்பட்ட வெளியை வெட்டை' என்றும் சொல்லுவதுண்டு.
அது புதிதாக அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த காட்டு முகாம் என்பதால், அப்போதுதான் அங்கே கிணறு ஒன்று தோண்டும் வேலை செய்து கொண்டிருந்தோம். அதனால் எமக்குத் தேவையான தண்ணீரை, சுமார் ஒரு மைல் தொலைவில் - வாய்க்காலின் நடுவே வெட்டப்பட்ட ஐந்து அடி ஆழமான கிணற்றிலிருந்தே எடுத்து வருவோம். பெரும்பாலும் ஆனந்தி அக்கா பாதுகாப்புக் கொடுத்து முன்னே செல்ல, எங்கள் பட்டாளம் தண்ணீரை நிரப்பும் பாத்திரங்களுடன் ( Barrel) பின்னே செல்லும். ஒருவர் தோளையும் மற்றவர் தோளையும் பலமாய்த் தடி ஒன்று இணைக்க - தடியின் நடுவில் நீர் நிறைந்த பாத்திரங்களைக் கட்டித் தொங்கவிட்டு இருவர், இருவராய்ச் சுமந்து வருவோம்.
ஆனந்தி அக்கா ...... மன்னார் தந்த மறப்பெண்.
எம் இதயங்களில் தனக்கென்று ஒரு தனிவிடத்தைப் பதிவு செய்து கொண்டா இனிய தோழி.
எப்போது நினைத்தாலும் அந்த நெடிய, உயரத்துக்கேற்ற பருமனுடன் உறுதியான உடல்வாகும் கொண்ட அவளுடைய உருவம் எம்முன் நின்று, எம்மைப் பார்த்துச் சிரிப்பது போலிருக்கும்...
ஆர். பி. ஜி. போன்ற கடினமான ஆயுதங்களைக் கூட லாவகமாய் இயக்குவதில், ஆனந்தி அக்கா கைதேர்ந்தவள். தனது மனவுணர்ச்சிகளை இலேசில் வெளிப்படுத்தாத அந்த வீராங்கனையின் அடி மனதில், எல்லோரிடத்திலும் ஒருவித ஆழமான பாசம் ஊற்றெடுத்துக் கொண்டிருந்ததை, அவளுடைய செய்கைகள் எப்பொழுதும் எமக்கு உணர்த்தும்.
பாரமான 'மூட்டைகளையோ, பொருட்களையோ தூக்க வேண்டுமென்றால், உடனே எல்லோருடைய வாயிலும் ஆனந்தி அக்கா தான்......
'' ஆனந்தி அக்கா, இதை ஒருக்காத் தூக்குங்கோ…”
' ஆனந்தி அக்கா, இதை ஒருக்காப் பிடிச்சு . என்ரை தலையிலை - வைச்சு விடுங்கோ .....
எல்லோருக்கும் சளைக்காமல் கை கொடுப்பாள்.
தன்னுடைய தலையில் மூடை ஒன்றைச் சுமந்து கொண்டே மறு கையால் இன்னொருவரின் மூடைக்குக் கை கொடுக்கும் அவளுடைய உடல் உறுதியை எப்போது நினைத்தாலும் வியப்பே மிஞ்சும்......
1985 ஆம் ஆண்டில், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காகத் தன்னை அர்ப்பணிக்கவென இவள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்டபோது, ஆனந்தி அக்காவின் பெற்றோர் கடுமையாக எதிர்த்தார்
“வீட்டை விட்டு நீ எப்ப வெளிக்கிட்டாயோ, அண்டைக்கே நீ எங்கடை பிள்ளையில்லை '' எனச் சொல்லிவிட்டனர்.
இவளுடைய உறுதி தளரவில்லை .
துணிவுடன் தனது பாதையைத் தேர்ந்தெடுத்தாள்.
எப்போதாவது ஆனந்தி அக்காவிடம் அவள் வீட்டைப் பற்றி - பெற்றோரைப் பற்றி யாராவது கேட்க நேர்ந்தால், பதில் எதுவும் கூறாமல் மௌனமாகிவிடுவாள்.
தனது பெற்றோரின் நிலைப்பாடுபற்றி அவளுடைய அடி மனதில் தாக்கம் ஒன்று இருந்ததற்கு, இந்த மௌனம் சாட்சி கூறும்.
மேலே இதுபற்றி எதுவும் கதையாமல் நாங்கள் பேச்சின் திசையை மாற்றுவோம்.
இந்தத் தற்காலிக முகாமில் எம்முடன் இருந்தவர்களில் மற்றுமொருத்தி ராதை.
நீர்வேலி மண்ணில் பிறந்து, வளர்ந்து தமிழீழ மண்ணுக்காய்த் தனது உயிரையும், உடலையும் அர்ப்பணித்தவள்..
சின்ன உருவம்....... மென்மையான சுபாவம்.
எதிலும் அவசரப்படாமல் பொறுமையுடன், எந்த வேலையானாலும் அதை முழுமையாகச் செய்துமுடிப்பதில் கெட்டிக்காரி. !
உலகப் போராட்ட வரலாறுகளைக்கூறும் பல புத்தகங்கள் ஆங்கில மொழியிலேயே எழுதப்பட்டிருப்பதால், அவற்றை விளங்கிக்கொள்வதற்குரிய ஆங்கில அறிவை எம்மில் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்ற ஆவல், எமக்கு எப்போதும் உண்டு. ராதைக்கு எம்மிலும்பார்க்க ஆங்கிலத்தில் ஓரளவு தேர்ச்சியுண்டு. எனவே அவளுடன் வேலை செய்யும் நேரங்களில் எல்லாம், ஆங்கிலச் சொற்களுக்கு அவளிடமிருந்து அர்த்தம் தெரிந்துகொள்வோம். கிணறு தோண்டும் வேலை நடக்கும் போதுகூட பல ஆங்கிலச் சொற்களுக்கு அவளிடமிருந்து அர்த்தம் தெரிந்துகொண்டோம். இதனால் வேலையின் பளுவும் எமக்குத் தெரியவில்லை ....... அந்த நேரங்கள் அறிவை வளர்க்கவும் உதவின.........
எமது கானக வாழ்க்கையில் மறக்கமுடியாத நாட்கள் அவை.
திடீரென்று ஒரு நாள், எமது முகாமுக்குச்சிறிது தொலைவில் இருந்த வெளிப்பகுதிக்கு மேல், இந்திய இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று தரையிறங்கும் நோக்கத்துடன் தாழப்பதிந்து, வானில் சுற்றிச்சுற்றி நோட்டம்விடத் தொடங்கியது. நாங்கள் அனைவரும் உடனே நிலை எடுத்துக்கொண்டோம். கப்டன் சதீஷ் அண்ணா தலைமையில் உலங்குவானூர்தி மீதுதாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஆனந்தி அக்காவின் ஜி - 3 இலிருந்து புறப்பட்ட ரவை, உலங்குவானூர்தியிலிருந்த உயரதிகாரி ஒருவனுடையகதையை முடித்தது........
இந்திய இராணுவம் இதைச்சற்றும் எதிர்பார்க்கவில்லை. தரையிறங்கினால் மேலும் ஆபத்து என்பதை உணர்ந்து, அவ்விடம் விட்டுப் பறந்து சென்றது...
அப்பகுதியில் எமது முகாம் ஒன்று இருப்பதை அந்தச் சம்பவத்தின் மூலம் அறிந்து கொண்ட இந்திய இராணுவம், அன்றுமுதல் எமது முகாமைக் குறிவைத்து எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்தது.
சொல்லிவைத்தாற் போல - தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு, எமது முகாமை நோக்கி இந்திய இராணுவம் ஏவிய எறிகணைகள் 'ஊய்' என்று சத்தம் எழுப்பிய வண்ணம், தொடர்ச்சியாக வந்து விழுந்து கொண்டேயிருக்கும். சில நாட்களில் தொடர்ந்து ஒரு மணிநேரம் - சில வேளைகளில் இரு மணிநேரம் எறிகணைத் தாக்குதல் நடக்கும்.
எனவே நாங்கள் தினமும் அதிகாலை நான்கு மணிக்கே, எம்மால் அமைக்கப்பட்ட பாதுகாப்பான பதுங்கு குழியைத் தஞ்சம் அடைவதை வழக்கமாக்கிக்கொண்டோம்.
இதன் காரணமாக எமது காலை உணவு (ரொட்டி) தயாரிப்பு வழமையான நேர அட்டவணைக்குள் அடங்காது போய்விடும், தொடர்ச்சியான நிகழ்ச்சியாக இது இருந்த படியால், சில நாட்களின் பின், எமது காலை உணவான ரொட்டியை, முதல் நாள் இரவேசெய்து, ஒவ்வொருவருடைய பங்கையும் அவரவர் சட்டைப் பைகளில் வைத்துக் கொள்ளுவோம்.
காலைவேளையின் 'பூபாளமாகத் தினமும் எறிகணைகள் பயங்கரச் சத்தத்துடன் எமது முகாமைச் சுற்றிவர விழுந்து வெடிக்கும்..
எங்கள் சட்டைப் பைகளில் பதுங்கியிருக்கும் ரொட்டிகள், பதுங்கு குழியில் இருந்த படியே காலியாகும்...
தாக்குதல் ஓய்ந்துவிட்டது - ஊர்ஜிதமானவுடன், முகாம் அமைக்கும் வேலைகளில் மும்முரமாய் ஈடுபடுவோம்.
அன்று ....... ஆடி மாதம் 3 ஆம் தேதி.
வழமைக்கு விரோதமாய் அன்றைய காலைப்பொழுது அமைதியாய் மலர்ந்தது. தினசரி குண்டுச் சத்தங்களுடன் விடியும் பொழுது, இன்று பறவைகளின் கீச்' ஒலியால் புது மெருகு பெற்றது. மந்திகள் கிளைக்குக் கிளை தாவி, கிளைகளை உலுப்பித் தமது குதூகலத்தை வெளியிட்டன. அன்று அதிகாலை ஐந்து மணிக்கு எறிகணை வந்து விழவில்லை .
அது ஒரு வித்தியாசமான அமைதி. அந்த அமைதிக்குப் பின்னர் ஏதோ விபரீதம் இருப்பதாக, அடிக்கடி உள் மனம் எச்சரித்துக் கொண்டேயிருந்தது........ ஏதோ ஒருவித சோகம் மனதை ஆக்கிரமிக்க - வேண்டாத சிந்தனைகளை உதறித் தள்ளிவிட்டுக் கடமைக்காகக் கால்கள் விரைகின்றன....
தண்ணீர் எடுத்துவரப் புறப்படுகிறோம்.
ஆனந்தி அக்கா ஜி - 3 உடன் முன்னே நடக்க, நாங்கள் பின்னால்.........
நெடிதுயர்ந்த மரங்களினூடாக - காட்டின் அடர்த்தியையும் ஊடறுத்து, வளைந்தும் நெளிந்தும் - ஏறியும் இறங்கியும் - அகன்றும் ஒடுங்கியும் கிடந்த அந்த ஒன்றரை அடிப்பாதை வழியே தண்ணீர் சுமந்து, முகாமை வந்தடைந்தோம்.
ஒன்றிரண்டு காவல் அரண்களை மேலதிகமாகப் போடத் தீர்மானித்ததனால், நானும் வேறு சிலரும் குழிகள் வெட்டும் வேலையில் நிற்கிறோம்.
அன்றைய சமையல் முறை ராதையினுடையது.
ராதையின் சமையல் என்றால் எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்......
ருசியான சமையலுடன்- சமைத்த பாத்திரங்கள், அந்த இடம் - யாவையும் சுத்தமாக்கி, ஒவ்வொரு பொருளையும் அதனதன் இடத்தில் வைத்து, மிகவும் நேர்த்தியாக ராதை செய்து முடிப்பாள்...... பார்க்கும்பொழுதே சாப்பிட வேண்டும்போல இருக்கும்.
அது ராதைக்கே உரிய தனிக்கலை
வேடிக்கையாய்ப் பேசி மகிழ்ந்து, அன்றைய மதிய உணவை அனைவரும் ரசித்துச் சாப்பிட்டோம்.
அடுத்த கணமே எமக்கு மரணம் நேரலாம் என்பதைத் தெரிந்து கொண்டும்- அந்தக்கணப்பொழுதை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு நாம்பழகிக் கொண்டவர்கள் ........ அதனால்தான் கானக வாழ்க்கையின் கடினங்களையும் அருமைத் தோழர்களின் உயிரிழப்புக்களையும் சகித்துக்கொண்டு, எமது உன்னதமான லட்சியத்துக்கான போராட்டத்தை உறுதியோடு தொடர்ந்து கொண்டிருப்பது. எமக்குச் சாத்தியமாகிறது.
அன்றிரவு ஒன்பது மணிவரை முகாம் காவல் வேலை ஆனந்தி அக்காவுக்கும் ராதைக்கும் உரியது. அதன்பின் இருவரும் வந்துபடுத்துக்கொள்கிறார்கள்.
கொமாண்டோ ரென்ற்' (Commando Tent) என்று சொல்லப்படுகின்ற - ஏழுபேர் மட்டும் படுத்திருக்கக்கூடிய - சிறிய கூடாரத்தில் எனது வலது பக்கம் ஒரு தோழி - இடது பக்கம் ராதை-இன்னும் இருவர் படுத்திருக்கிறோம் ; கூடாரத்துக்கு வெளியே ஆனந்தி அக்காவும் இன்னொரு தோழியும்.
அனைவரும் நித்திரையில் ஆழ்ந்து விட்ட நேரம்.
இரவு 10 மணி இருக்கும். செவிப் பாறையை உடைக்கும் பாரிய வெடிச்சத்தம் ஒன்று நித்திரையைக் கலைக்கிறது. திடுக்குற்றுக் கண்விழிக்கிறோம்......
''ஐயோ ....... ஐயோ ....... இங்கை வாங்கோ" என்ற ஆனந்தி அக்காவின் கூக்குரல், காட்டு மரங்களில் எதிரொலித்துச் சிதறுகிறது.
சுற்றிலும் கருமை படர்ந்த இருள் .......
எதுவுமே கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆனாலும் எமது முகாமுக்குள்ளேயே எறிகணை ஒன்று விழுந்து வெடித்து விட்டது என்பதை மட்டும், உணரக் கூடியதாக இருந்தது.
“அக்கா டோர்ச் எங்கை ....?” - ஒரு குரல்.
"இங்கைதான், என்ரை தலைமாட்டிலை இருக்கு....... என்னாலை எழும்பி எடுக்க ஏலாமை இருக்கு .....'' - காயமடைந்த தோழி ஒருத்தி முனகுகிறா.
இதற்கிடையில் - "ஷெல் அடிக்கிறாங்கள்... பதுங்குகுழிக்குள் ஓடுங்கோ '' என்று, பாதுகாப்பரணிலிருந்து ஒரு தோழி கத்துகிறாள்..
'ஒரு எறிகணை விழுந்து எங்கள் கூடாரத்துக்கு மிக அருகில் வெடித்திருக்கிறது...''
என் ஆடை முழுவதும் ஈரமாய் - பிசு பிசுவென ஒட்டுகிறது ... இரத்தம்!
யாருக்கோ காயம் பட்டிருக்கிறது..... அதுவும் பலமான காயமாகத்தான் இருக்க வேண்டும்...... இல்லையென்றால் எனது ஆடைமுழுவதும் எப்படி - இரத்தம் தோய்ந்து .......
' ஐயோ ........ ஓடிவாங்கோ ....... எனக்குக் காயம்பட்டிட்டுது.......'' - ஆனந்தி அக்கா பலமாகக் கத்துகிறாள்.
எங்கள் கூடாரத்துக்கு எல் லோரும் ஓடிவருவது - இருட்டிலும் காலடி ஓசைகளின் மூலம் உணரமுடிகிறது.
இருட்டில் அங்குமிங்கும் துழாவி 'ரோர்ச் லைற் 'றை எடுத்து - மிதிலாக்கா படுத்திருந்த பக்கம் அடிக்கிறேன்.
மிதிலா அக்காவின் முழங்கால்பகுதியிலிருந்து இரத்தம் 'குபுகுபு' என வழிந்துகொண்டிருக்கிறது.......
அடுத்த எறிகணை வந்துவிழுமுன் எல்லோரும் பதுங்கு குழிக்குள் போய்விட வேண்டும்.
மிதிலா அக்காவினால் நடக்கவோ, ஓடவோ நிச்சயம் முடியாது...
அவளையும் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும்.
ஒரு கையால் ரோர்ச் லைற்றை அடித்தபடி - அவவை மெதுவாய்த் தூக்கி இழுத்துக் கொண்டு, பதுங்குகுழி நோக்கி விரைகின்றேன்.
இதற்கிடையில் மேலும் இருவர் அவ்விடம் வந்துவிட, எல்லோருமாய் மிதிலா அக்காவைப் பதுங்குகுழிக்குள் கொண்டு போய்ச் சேர்க்க - இரண்டு பேர் அவவுக்கு வேண்டிய முதலுதவிச் சிகிச்சை செய்கிறார்கள். நானும் மற்றவர்களும் வெளியேவந்து, ஆனந்தி அக்காவிடம் ஓடுகிறோம்......
தொடையைக் கிழித்துக்கொண்டு எறிகணைத்துண்டொன்று வயிற்றினுள் பாய்ந்ததனால் இரத்தம் ஆறெனப் பெருக -
தாங்கமுடியாத வேதனையில் முனகியவாறு ஆனந்தி அக்கா அப்படியும் இப்படியும் புரண்டு கொண்டு கிடக்கிறாள்.
எங்கள் மூடைகளைத் தன் தலையில் சுமந்து கைகொடுத்த எங்கள் ஆனந்தி அக்கா, வலியால் துடிதுடித்துக்கொண்டிருக்க - அந்த வலியின் வேதனையை எங்களால் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கத்தில், எம் இதயம் கனக்கிறது. உணர்ச்சிகளால் நெகிழ்ந்துபோகவோ கரைந்துபோகவோ அது இடமுமல்ல... நேரமுமல்ல .....
அவவை மெதுவாகத் தூக்கிக்கொண்டு பதுங்கு குழியை நோக்கி நாங்கள் விரைவாக நடக்கத் துவங்க -
'ஊய்ங் காரமிட்டபடி அடுத்த எறிகணை எமது முகாமை நோக்கி வெறியுடன் வருகிறது.
அப்படியே குப்புறப்படுக்கிறோம்.....
பலத்த ஓசையுடன் - சற்றுத் தள்ளிப்போய் எறிகணை வெடிக்கிறது.
மீண்டும் சிறிது தூரம்போக - அடுத்த எறிகணை ....
ஒருமாதிரி அனைவரும் பதுங்கு குழிக்குள் போய்ச் சேர்ந்ததும் - ' ராதை எங்கே?'
' ராதை ஏன் எம்முடன் வரவில்லை ? '
அனைவர் மனதிலும் இதே கேள்வி.....
எறிகணைகள் தொடர்ச்சியாக விழுந்து கொண்டேயிருக்கின்றன........
ஆனந்தி அக்கா வலி பொறுக்கமுடியாமல் துடித்துக்கொண்டேயிருக்கிறாள்.
அந்த வேதனை ஒரு பக்கம் - ராதையைக் காணவில்லை என்று போய்ப் பார்த்து வரக்கூட முடியாமல் குண்டுமாரி பொழிந்து கொண்டிருந்தது, இதயத்தில் ஏற்படுத்தியரணம் ஒரு பக்கமுமாய்.......
தொடர்ந்து வந்த ஒருமணி நேரமும் பதுங்குகுழியே தஞ்சம் என இருக்கிறோம்.
ஒருவாறு எறிகணை வீச்சு ஓய்கிறது.
கூடாரத்தை நோக்கி ஓடுகிறோம்.
அங்கே ..
முகத்தின் ஒரு பகுதி சிதைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் ராதை ' ஆழ்ந்த துயிலில் ' - அடங்கிப்போய்க் கிடக்கிறாள்.
பத்து மணிக்கு - முதலில் விழுந்த ஏறிகணை - எங்கள் அன்பு ராதையை எம்மிட மிருந்து பிரித்துவிட்ட சோகத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.........
என் ஆடைகளை நனைத்திருந்தது, என் இனிய ராதையின் குருதியா.. ?
இதயம் பாறையாய்க் கனக்கிறது......
ஆனந்தி அக்காவின் உயிர், ஜீவமரணப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தது.
அவளுடைய உயிரையாவது காப்பாற்று வோம் என்ற நம்பிக்கையில் - எம்மால் முடிந்த சிகிச்சையைச் செய்தபோதும் - ஏற்கெனவே அதிக இரத்தம் வெளியேறிவிட்ட காரணத்தினால், அடுத்த நாள் - ஆடி 4 ஆம் தேதி - அந்த இனிய உயிரும் எம்மைவிட்டுப் பிரிந்தது.
போருக்குப் புறப்படும் வீரமறவர்களுக்குப் பெண்கள் இரத்தத்தால் வெற்றித் திலகமிட்டு அனுப்புவதைப், பழைய வரலாறுகளில் படித்திருக்கிறோம்.
இங்கே -
தங்கள் உடலையே குருதியால் நனைத்து - தமிழீழப் போராட்டத்தை உறுதியுடன் தொடர்வதற்கு எம்மையெல்லாம் ஆசீர்வதித்துப் போயிருக்கிறார்கள் எமது வீராங்கனை - கள்,
ஆனந்தியும்..... ராதையும்.....
அவர்களது ஆசிகள் நிச்சயம் பலிக்கும்....
தமிழீழப் போராட்டம் வெற்றிவரலாறு படைக்கும்.
- சித்ரா
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்