Ad Code

Recent Posts

திலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறான்.

திலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறான்
************************************************

திலீபனிற்கு
தீபம் ஏற்றுவோரே
பார்த்தீபனின்
பாதம் தொழுவோரே
ஈகச் சிகரத்திற்கு
மாலை தொடுப்போரே
அதிசய வள்ளலுக்காய்
கசிகின்ற நெஞ்சோரே
மனதிலேற்றுங்கள்…
எங்கள்
பார்த்தீபன்
இப்போதும்
பசியோடுதான் இருக்கிறான்

சிறுகச் சிறுகச் சேர்த்து
நிமிரக் கட்டிய மனையும்
உயிரைப் பிரியும் பொழுதில்
தந்தை
உயிலாய்த் தந்த வளவும்
இன்பம்
பெருகப் பெருக நாங்கள்
ஓடித்திரிந்த தெருவும்
உள்ளம்
உருக உருகக் கண்ணீர்
விட்டுப்பிரிந்த ஊரும்
திரும்பக் கிடைக்கும்
காலம் வரைக்கும்,
எங்கள்
பார்த்தீபன்
பசியோடுதான் இருப்பான்

நாளும் பொழுதும்
கண்ணைக் கரைத்து
நாளை வருவார்
நாளை வருவார்
என்றே தங்கள்
இதயம் வதைத்து
கொலைஞர் பிடித்த
உறவை நினைத்துக்
கதறும் மனங்கள்
இருக்கும் வரைக்கும்,
எங்கள்
பார்த்தீபன்
பசியோடுதான் இருப்பான்

சதியும் வெறியும்
ஒன்றாய்க் கலந்து
கருணை கனிமை
எதுவும் மறந்து
எங்கோ பிறந்து
மனிதம் துறந்து
எங்கள் மண்ணில்
மரணம் விதைத்து
துயரச் சுமையுள்
எம்மைத் திணிக்கும்
கொடுமைப் படைகள்
எரியும் வரைக்கும்,
எங்கள்
பார்த்தீபன்
பசியோடுதான் இருப்பான்

உயிரை உடலை
உறவைத் துறந்து
உணர்வு முழுதும்
தமிழைக் கலந்து
விடியும் காலைக்
கதிராய் விரிந்து
தமிழர் தேசக்
கனவை வரித்து
மண்ணின் மானம்
பெரிதாய் மதித்து
மண்ணுள் உறங்கும்
மாந்தர் கேட்கும்
விடுதலை வந்து
சேரும் வரைக்கும்,
எங்கள்
பார்த்தீபன்
பசியோடுதான் இருப்பான்

ஆகவே…
பசித்த வயிற்றோடு
பாடையேறிய
எங்கள்
பார்த்தீபன் கனவுகள்
மேடையேறி முழங்கவல்ல
தீபமேற்றி வணங்கவல்ல,
களத்திலேறிப் பகைமுடிக்க
நெருப்பிலேறிக்
கொடிபிடிக்க
தீர்வெடுங்கள்
திலீபனிற்குத் தேவையான
உணவை
உங்களால்தான்
சமைக்க முடியும்.



Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Comments


 

Ad Code